வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.





1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக
இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர்அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான்
என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர்
இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை.
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச்
சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

27.02.2014 வியாழக்கிழமை அன்று மகா சிவராத்திரி


"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 27.02.2014 வியாழக்கிழமை அன்று அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

சிவராத்திரி விரத விதிகள்

சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.

நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை ”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே! தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.

சிவராத்திரி நன்னாளின் திரு அருமைகள்
எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.