வியாழன், 7 அக்டோபர், 2010

நவராத்திரி ஒன்பது நாள் பூஜைகள், அலங்காரங்கள், நைவேத்தியங்கள்!

Posted on 8:11 AM by Vijay Kumar

நல்வரம் தந்து அருள்!

புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி புரியும் பாதாம் புயமலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி! புராதனி! புராணி! திரிபுவனேசுவரி! மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி! வராகி! எழில் வளர்திருக்கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே!

- அபிராமி அந்தாதி

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது மரபு. முதல் நாளன்று அசுரர்களாகிய மது- கைடபரை சம்ஹரிக்க உதவிய அம்பிகையை, அபயம்- வரதம், புத்தகம், அட்ச மாலையுடன் திகழும் துர்கையாக அலங்கரிக்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் ஒன்பது விதமான பெண்குழந்தைகளை தேவியாக பாவித்து பூஜிக்க வேண்டும் என்கிறது தேவி பாகவதம்.இந்தக் குழந்தைகள், 2 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதல் நாளன்று 2 வயது குழந்தையை 'குமாரி'யாக பாவித்து வணங்க வேண்டும். இதனால் ஆயுளும் செல்வமும் பெருகும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிற பூக்களை சமர்ப்பித்து அம்பாளை வழிபட வேண்டும். இதன்படி, செவ்வரளி, சாமந்திப் பூக்களால் தேவியை அர்ச்சித்து வணங்கலாம்.

நைவேத்தியம்

காலை எலுமிச்சை சாதம்: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். சாதத்தை பாத்திரத்தில் போட்டு தாளித்தவற்றை கொட்டி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். பிறகு எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை பாசிப்பயறு சுண்டல்: பாசிப்பயறை சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் ஊறியதும் வேகவைக்க வேண்டும். பிறகு, வெல்லப் பாகு காய்ச்சி, இதில் வேக வைத்த பயறு, ஏலக்காய்த் தூள், சுக்குப் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கினால் சுண்டல் ரெடி.


எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டில்இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி நன்மைகள் செயவும் எள்ளளவும் முடியாதுநின் உனது அம்மருவும் கடைக்கண்ணருள் சிறிது செயின் உதவாத நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலையாகும் அதுவன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து முப்பத்திரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும் நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளி வந்து சடுதியில் காத்து ரட்சித்தது ஓர்ந்து வனச நிகர் நின் பாதம் நம்பினேன் வந்தருள்செய்!வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ் வாமி! அபிராமி! உமையே

- அபிராமி அந்தாதி

இரண்டாம் நாளன்று மகிஷாசுரனை வதைக்கப் புறப்பட்ட ராஜராஜேஸ்வரியின் வடிவில் அலங்கரிப்பர்.

இந்த நாளில் 3 வயதுள்ள பெண் குழந்தையை, 'திரிமூர்த்தி' யாக பாவித்து வழிபடுவது நலம். இதனால் தன-தானியங்கள் பெருகும்.

2-ஆம் நாளன்றும் அம்பாளுக்கு மஞ்சள் அல்லது செந்நிற மலர்களை அர்ப்பணிக்கலாம். சிவப்பு நிறக் கொன்றை உகந்தது.

நைவேத்தியம்

காலை எள்ளு சாதம்: எள்ளை எண்ணெயில்லாமல் வறுக்கவும். பிறகு, எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து, மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுத்து, எள் சேர்த்து நைஸாக பொடிக்கவும். சாதத்தில் பொடித்த எள் பொடி, உப்பைத் தூவி, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.

மாலை மொச்சை மசாலா சுண்டல்: முதல் நாளே ஊற வைத்த மொச்சையுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, தனியா, உப்பு கலந்து அரைத்த விழுதை சேர்த்து, வேகவைத்து இறக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, எண்ணெயில் கடுகு-கறிவேப்பிலை தாளிக்கவும்.


மஹா தேவீம் மஹா சக்திம் பவானீம் பவ வல்லபாம் பவார்தி பஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோக மாதரம்

- ஸ்ரீ தேவி அஷ்டகம்

பொருள்: தேவியே! மஹாதேவனின் மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், பரமசிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலையைப் போக்குபவளும், உலகங்களுக்குத் தாயுமான தங்களை வணங்குகிறேன்.

மூன்றாம் நாளன்று மகிஷாசுர வதம் செய்த தேவியை, சூலம் ஏந்தியவளாக, மகிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலமாக அலங்கரித்து வழிபட வேண்டும். இந்தக் கோலத்தில் இருக்கும் தேவியை கல்யாணி என்றும் சொல்வர்.

நவராத்திரி- திருதியை தினத்தில் அதாவது 3-ஆம் திருநாளன்று 4 வயதுள்ள பெண் குழந்தையை 'கல்யாணி' என்ற திருநாமத்தால் வழிபட வேண்டும். இதனால் வித்தைகளில் வெற்றி, அரச மரியாதை உண்டாகும்.

செம்பருத்தி, தாமரை மலர்கள் அர்ப்பணித்தும், இந்த மலர்களால் அர்ச்சித்தும் அம்பாளை வணங்குவது நலம்.

நைவேத்தியம்

காலை தயிர் சாதம்: சாதத்தை குழைவாக வடித்துக் கொள்ளவும். சாதம் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

பிறகு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முந்திரி, திராட்சை போட்டு வறுத்து தாளித்துக் கொட்டி, தயிரை விட்டு கலக்கவும்.

மாலை காராமணி கார சுண்டல்: காராமணியில் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். இதையடுத்து தண்ணீரை வடித்த பிறகு, இஞ்சி விழுது, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை கலந்து எண்ணெயில் கடுகு தாளித்துக் கலக்கவும்.


தத்யாத் தயானு பவனோ த்ரவிணாம்புதாராம் அஸ்மின்ன கிஞ்சனவிஹங்கசிசௌவிஷண்ணே துஷ்கர்ம கர்மம் அபநீய சிராய தூரம் நாராயண ப்ரணயினீநயனாம்பு வாஹ:

- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்

பொருள்: கருணையாகிய அனுகூலக் காற்றுடன் கூடிய மகாலட்சுமி யின் கண்களாகிய நீருண்ட மேகம்... தரித்திரத்தால் கஷ்டப்படும் இந்த ஏழையான சிறிய சாதகப் பறவையிடம், வெகு நாட்களாக ஏற்பட்ட பாவம் எனும் தாபம் போக்கி, பொருள் மழையை அருளட்டும்.

4-ஆம் நாளன்று, ஜயதுர்கை திருக்கோலம். சிங்காதனத்தில்... இடையூறுகள் நீங்கிய தேவர்களும் முனிவர்களும் செய்யும் தோத்திரங் களை ஏற்றருளும் கோலத்தில் உள்ள இவளை, ரோகிணி என்பர்.

இன்று ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை, 'ரோகிணி' என்ற திருநாமத்துடன் வழிபட வேண்டும். இதனால் ரோகங்கள் நீங்கும்.

நவராத்திரியின் 4,5,6-ஆம் நாட்களில் செந்நிற மலர்களால் தேவி பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அதன்படி சதுர்த்தி நாளில் செந்தாமரை கொண்டு அம்மன் வழிபாடுகளைச் செய்யலாம்.

நைவேத்தியம்

காலை சர்க்கரை பொங்கல்: சிறிது நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை லேசாக வறுத்து, 6 கப் தண்ணீரில் நன்றாகக் குழைய வேகவிடவும். பிறகு அதில் பால்விட்டு, கொதித்ததும் கெட்டியாக வரும்போது தீயைக் குறைத்து, தயாராக வைத்திருக்கும் வெல்லப் பாகை சேர்த்து, சாதத்தை போட்டு கிளறவும். நடுநடுவே நெய் சேர்க்கவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.

மாலை பட்டாணி சுண்டல்: நீரில் நன்கு ஊறிய பட்டாணியுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பட்டாணி வெந்ததும் அரைத்த பொடியை சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தேங்காய், மாங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.


கீர்தேவதேதி கருடத்வஜ ஸூந்தரீதி சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேளிஷூ ஸம்ஸ்திதாயை தஸ்யை நமஸ் த்ரிபுவனைக குரோஸ் தருண்யை

- ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம்

பொருள்: சரஸ்வதிதேவி என்றும், கருட வாகனனின் மனைவியாகிய மகாலட்சுமி என்றும், சாகம்பரியாகிய பூமாதேவி என்றும் பார்வதி என்றும் பிரசித்தி பெற்று, படைத்தல்- காத்தல்- ஒடுக்கல் ஆகிய விளையாட்டான காரியங்களில் அமர்ந்தவளும், மூன்று உலகங்களுக்கும் குருவாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனுடைய பத்தினியானவளுமான ஸ்ரீமகாலட்சுமிக்கு நமஸ்காரம்.

5-ஆம் நாளன்று அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் அம்பாளை அலங்காரம் செய்வர். சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த துர்காதேவி, சும்பன் எனும் அசுரனால் அனுப்பப்பட்ட தூதுவன் தெரிவிக்கும் தகவலை செவிமடுப்பவளாகக் காட்சி தருவாள்.

இன்று 6 வயதுள்ள பெண் குழந்தையை, 'காளிகா' என்ற திருநாமத்தில் அழைத்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பாளை, காளிகாதேவியாக தியானித்து, மனமுருக வழிபடுவதால் பயம் நீங்கும். இடையறாது தொல்லைகள் தந்து வந்த எதிரிகள் அடங்குவர்; பகை ஒழியும்.

இந்நாளில் செவ்வரளி மலர் மாலை அணிவித்தும், இந்த மலர்களால் அம்பாளின் திருநாமம் போற்றிச் சொல்லி அர்ச்சித்தும் வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை பால் சாதம்: பசும்பாலை சுண்ட காய்ச்சவும். சாதத்தை குழைய வேக விடவும். இதில் காய்ச்சிய பாலை விட்டு, சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து சாதத்துடன் கலக்கவும்.

மாலை கார்ன் வெஜிடபிள் சுண்டல்: சோளத்தில் உப்பு சேர்த்து, வேக வைத்து இறக்கி, தண்ணீரை வடிக்கவும். கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கலக்கவும்.


ஸேவே தேவி த்ரிதச மஹிளா மௌளிமாலார்ச்சிதம் தே ஸித்திக்ஷேத்ரம் சமிதவிபதாம் ஸம்பதாம் பாதபத்மம் யஸ்மின்னீஷந்நமிதசிரஸோ யாபயித்வா சரீரம் வர்த்திஷ்யந்தே விதமஸி பதே வாஸூதேவஸ்ய தன்யா:

- ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி

கருத்து: தேவியே... தேவப் பெண்களின் சிரசுகளின் வரிசைகளால் அர்ச்சிக்கப் பட்டதும், குறையில்லா ஐஸ்வரியங்களுக்கு உற்பத்தி ஸ்தானமுமாகிய தங்களின் பாதக் கமலத்தில் தலை வணங்கியவர்களும், பாக்கியம் பெற்றவராக சரீரம் விலகிய பின் வைகுண்டத்தில் நித்யவாசம் செய்வார்களோ... அந்த பாத கமலத்தை சேவிக்கிறேன்.

6-வது நாளில் சர்ப்பராஜ (பாம்பு) ஆசனத்தில் சண்டிகாதேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் அலங்கரிப்பர். அட்சமாலை, கபாலம், தாமரை, தங்கக் கலசம் ஆகியவற்றை ஏந்தியவண்ணம் திகழும் தேவியின் இந்த வடிவம், தும்ரலோசனனை வதம் செய்த கோலமாம்.

நவராத்திரியில் சஷ்டி தினத்தில் ஏழு வயதுள்ள பெண் குழந்தையை, 'சண்டிகா' எனும் திருநாமத்துடன் வழிபடுவதால் செல்வம் சேரும்.

இந்த தினத்தில் செந்தாமரை, செம்பருத்தி, ரோஜா ஆகிய மலர்களால் அர்ச்சித்தும், மாலை அணிவித்தும் சக்தியை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை கல்கண்டு சாதம்: ஒரு டீஸ்பூன் நெய்யில் அரிசி, பயத்தம் பருப்பை வறுத்து வெந்நீரை விட்டு நன்றாக அலசவும். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து, களைந்த அரிசியைப் போட்டு வேகவிடவும். கடாயில் கல்கண்டைப் போட்டு கால் டம்ளர் தண்ணீர் விட்டு கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சவும். இதில் சாதம், பருப்பைக் கொட்டி கைவிடாமல் கிளறவும். பிறகு, சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை ராஜ்மா சுண்டல்: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, உப்பு சேர்த்து, வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு எண்ணெயில் கடுகு தாளித்து, வறுத்து அரைத்த பொடி, கறிவேப்பிலை சேர்த்து, இதனுடன் வேகவைத்த ராஜ்மாவை கலந்து இறக்கவும்.


கலைமகளே அருள்வாய் கற்பனைத் தேன் இதழாள்- சுவைக் காவியம் எனும் மணிக் கொங்கையினாள் சிற்பம் முதற் கலைகள்- பல தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்சொற்படு நயம் அறிவாள்- இசை தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார் விற்பனத் தமிழ்ப் புலவோர்- அந்த மேலவர் நாவெனும் மலர்ப் பதத்தாள்

- மகாகவி பாரதியார்

நவராத்திரியின் 7-ஆம் நாளன்று தேவியை, தங்கமயமான பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் சாம்பவியாக அலங்கரிக்க வேண்டும். ஒரு காலை மடித்து வைத்து, மற்றொரு காலை தாமரை மலரில் ஊன்றியிருப்பது போல் இந்த தேவியை அலங்கரிப்பது சிறப்பு.

இன்று 8 வயதுள்ள பெண் குழந்தையை, சாம்பவியாக பூஜிக்க வேண்டும். இதனால் சௌபாக்கியங்களும் அரச போகமும் கிடைக்கும்.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவிக்கு உரியது என்பது பொது நியதி. இந்த நாட்களில் வெண்ணிற மலர்களை அம்பாளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி, 7-ஆம் நாளன்று மல்லிகையால் அர்ச்சித்து அம்பாளை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை வெண் பொங்கல்: அரிசி, பயத்தம் பருப்பை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

மாலை கடலைப்பருப்பு புதினா சுண்டல்: கடலைப்பருப்பை உப்பு சேர்த்து, வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். புதினாவை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்த கடலைப்பருப்பை போட்டு வதக்கி, புதினா, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும்.


புத்தகத் துள்ளுறை மாதே! பூவில் அமர்ந்துறை வாழ்வே! வித்தகப் பெண்பிள்ளை நங்காய்!வேதப் பொருளுக்கிறைவி! எக்காலும் உன்னைத் தொழுவோம் எழுத்தறி புத்தி பண்ணுவிப்பாய்!

நவராத்திரியின் 8-ஆம் நாளன்று... ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்தபிறகு, கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட வேண்டும்.

அணிமா முதலான எட்டுச் சக்திகளும் புடைசூழ வீற்றிருக்கும் இந்த தேவி, அபய- வரதம், கரும்பு வில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவாள்.

இந்த நாளில் 9 வயதுள்ள குழந்தையை, துர்கையாக பூஜிக்க வேண்டும். இதனால் கொடூரமான பகைவர்களும் அழிவார்கள். செயற்கரிய செயல்களையும் எளிதில் செய்து முடிக்கும் வல்லமை கிடைக்கும்.

இன்று முல்லை மலர்களால் ஆன மாலை அணிவித்தும், வெண் தாமரை மலர்களால் அலங்கரித்தும் தேவியை வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை தேங்காய் சாதம்: எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் தேங்காய் துருவலைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வறுத்து சாதத்துடன் கலக்கவும். இதன் பிறகு நெய்யில் முந்திரியை வறுத்து சாதத்துடன் சேர்க்க வேண்டும்.

மாலை கொண்டக்கடலை சுண்டல்: சென்னாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்கவும். கொள்ளு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துண்டுகளை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்த கொண்டக்கடலை, அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி மிளகுத்தூள் தூவவும்.


நங்காய் நங்காய் நமோஸ்து! ஞானக் கொழுந்தே நமோஸ்து! கல்விக் கரசி நமோஸ்து! கணக்கறி தேவி நமோஸ்து! சொல்லும் பொருளே நமோஸ்து! சூட்சுமரூபி நமோஸ்து!

9-ஆம் நாளன்று சும்ப- நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரி எனும் சிவசக்தி கோலத்தில் அம்பாளை வழிபடுவர்.

இன்று 10 வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டுமாம். இதன் மூலம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஒன்பது நாட்களும்... பூஜிக்க வேண்டிய பெண் குழந்தைகளை ஆசனத்தில் அமர்த்தி, அவர்களின் பாதங்களைக் கழுவி, பூக்கள் தூவி வழிபடுவதுடன், பிரார்த்தனைகளை மனதில் சொல்லியபடி வணங்க

வேண்டும். இவர்களுக்கு, நம் வசதிக்கு தகுந்தபடி ஆடை- அணிகலன்கள் அளிப்பதால் மிகுந்த நன்மை உண்டு.

இன்று அடுக்கு மல்லி, நந்தியாவட்டை மலர்களை அம்பாளுக்கு சமர்ப்பித்து வழிபடலாம்.

நைவேத்தியம்

காலை வெல்ல புட்டு: புழுங்கலரிசியை சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், நீர் சேர்த்து தயிர் சாதம் போல் தளர கலந்து, துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் நன்றாக கட்டியில்லாமல் தேய்த்துக் கொள்ளவும். நெய்யில் தேங்காய், முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து முத்துப் பாகு காய்ச்சவும். இதில் உதிர்த்த ரவை, தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி, நெய் கலந்து வைக்கவும். ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.

மாலை பாசிப்பருப்பு சுண்டல்: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைத்து, இட்லி தட்டில் பரப்பி, வேக வைக்கவும். கடாயில் நெய் விட்டு, உரித்த பட்டாணி, நறுக்கிய இஞ்சி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்த பருப்பு, வதக்கிய பட்டாணி, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்

அலைமகளே வருக... ஐஸ்வரியம் தருக!


ஆந்தை வாகனத்தில் அலைமகள்!

திருமகளின் வாகனம் அன்னம் என்கின்றன ஞான நூல்கள். ஆனால், வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி நாட்களில், தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்கின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால், சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்புகின்றனர்.

மதிய வேளையில் மகாலட்சுமி!

கேரளா- சோட்டாணிக்கரையில், ஸ்ரீலட்சுமி நாராயண தத்துவத்துடன் எழுந்தருளியிருக்கிறாள் ஆதிபராசக்தி. இங்கே தரிசனம் தரும் சிவப்பு வெட்டுக்கல்- பகவதி அம்மனாகவும், வலப்புறம் உள்ள சிறிய கருங்கல்- மகா விஷ்ணுவாகவும் பூஜிக்கப்படுகின்றன. இங்கே காலையில்- வெண்ணிற ஆடை யுடன் ஸ்ரீசரஸ்வதிதேவியாகவும், மதியம்- செந்நிற ஆடையுடன் ஸ்ரீலட்சுமி யாகவும், மாலை வேளையில்- நீல நிற ஆடையுடன் ஸ்ரீதுர்கையாகவும் காட்சி தருகிறாள் அம்மன்.

விளக்கில் தீபலட்சுமி... விலங்குகளில் சோபலட்சுமி!

விளக்கில் வாசம் செய்பவள் ஸ்ரீமகா லட்சுமி. எனவே, திருவிளக்கை தீபலட்சுமி என்பர். ஸ்ரீதுர்கையின் வடிவங்களிலும் ஸ்ரீதீபதுர்கை உண்டு. தீபமேற்றப்பட்ட விளக்கை, ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடாது என்பது ஐதீகம்!

தீபத்தில் தீபலட்சுமியாகத் திகழ்பவள் வைகுண்டத்தில்- ஸ்ரீமகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில்- ஸ்ரீசொர்க்கலட்சுமியாகவும், ராஜ்ஜியத்தில்- ஸ்ரீராஜ்யலட்சுமியாகவும், இல்லங்களில்- கிரக லட்சுமியாகவும், விலங்குகளிடம்- ஸ்ரீசோப லட்சுமியாகவும், புண்ணியசீலர்களிடம்- ஸ்ரீப்ரீதி லட்சுமியாகவும், சத்திரியர்களிடம்- ஸ்ரீகீர்த்தி லட்சுமியாகவும், வேதாந்திகளிடம்- ஸ்ரீதயா லட்சுமியாகவும் அருள்பாலிப்பதாக புராண நூல்கள் கூறுகின்றன.

திருமகளின் அருள் வேண்டுமா?

காலட்சுமி அஷ்டகம், ஸ்ரீசூக்தம், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ரஸத நாம ஸ்தோத் திரம், ஸ்ரீஸ்துதி, தனவிருத்தி, தனவிருத்திமாலை ஆகியவற்றை பாராயணம் செய்து நவராத்திரியில் ஸ்ரீமகாலட்சுமியை வழிபட்டால், சகல சௌபாக்கியமும் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

ஒரு மணி நேரம் தாயாரைப் பிரியும் பெருமாள்

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீஉப்பிலியப்பன் ஆலயத்தில், தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை பெருமாள். எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவாராம்! ஆனால் நவராத்திரி- அம்பு போடும் வைபவத்தின்போது ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்!

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்


வேதங்கள் போற்றும் வாக்தேவி!

'வாக்தேவி' என வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீசரஸ்வதி, ஞான வடிவாக திகழ்பவள். இவளின் திருமுகம்- பிரம்ம வித்தை; திருக்கரங்கள்- நான்கு வேதங்கள்; கண்கள்- எண்ணும் எழுத்தும்; திருப்பாதங்கள்- இதிகாசங்கள்; தேவியின் தனங்கள்- சங்கீத சாகித்யம்; இவளின் கரத்தில் இருக்கும் யாழ்- ஓம்காரம் எனப்படும் சர்வ ஸித்தி மந்திரத்தைக் குறிக்கும் என்கின்றன புராண நூல்கள்.

மஞ்சள் பொடி பிரசாதம்

சிவனார், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மூவரையும் திருச்சி அருகேயுள்ள உத்தமர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கே... பிரம்மனின் சந்நிதிக்கு அருகில் ஞானசரஸ்வதியாக, தனிச்சந்நிதி கொண்டிருக்கிறாள் சரஸ்வதிதேவி. இங்கு, மஞ்சள் பொடியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

வியாசர் வழிபட்ட கலைவாணி!

ந்திராவில், 'பாசாரா' எனும் ஊரில் ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு தனிக்கோயில் உண்டு. வியாசர் வழிபட்ட ஆலயம் இது. இங்கே வீணை இல்லாமல் காட்சி தரும் கலைவாணியை விநாயகர் வழிபட்டதாகவும் கதை உண்டு.

ஜப்பானில் ஸ்ரீசரஸ்வதிதேவியை 'பென்டென்' என்ற பெயரில் கல்விக் கடவுளாக வழிபடுகின்றனர்.

கலைகளின் வடிவமாய்...

நாகை மாவட்டம்- கடலங்குடியில் உள்ள சிவாலயத்தில் விசேஷ வடிவில் அருளும் கலைமகளை தரிசிக்கலாம். வளையல், கொலுசு, முத்துச் சரங்கள், கிரீடம் மற்றும் நெற்றிப்பட்டம் திகழ வித்தியாசமான வஸ்திர அமைப்புடன் அருள்பாலிக்கிறாள் இந்த தேவி.

திருமறைக்காடு தலத்தில், கலை களின் வடிவமாக நின்று இறைவனை வழிபட்டாளாம் ஸ்ரீசரஸ்வதி. இந்த ஆலயத்துக்கு வந்து அம்பிகையை தரிசித்து, சிவ பூஜை செய்தால், வேதங்களை கற்றுணர்ந்த பலனைப் பெறலாம்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்!

சரஸ்வதிக்கு தனிக்கோயில்!

குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ளது பத்மநாபபுரம். இங்கே... தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீசரஸ்வதி. திருவனந்தபுரம் ஆராட்டு விழாவின் போது, இங்கு உள்ள சரஸ்வதிதேவியே எழுந்தருள்கிறாளாம்.

அஷ்ட சரஸ்வதிகள்

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர் அஷ்ட சரஸ்வதிகளாம்!

நடனமாடும் சரஸ்வதி

ர்நாடக மாநிலம், பேலூர் ஆலயத்தில், சிலம்பொலியே பிரணவ நாதமாக, வீணையின் ஒலியே வேத கீதமாக இசைக்க... ஆனந்த நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறாள் சரஸ்வதி தேவி.

நவராத்திரியின் மகிமை

வராத்திரியின் மகிமையை விளக்கும் இந்தக் கதை ஸ்ரீதேவி பாகவதம்- 5-வது ஸ்கந்தத்தில் உள்ளது. ஸ்ரீதேவி மஹாத்மியத்திலும் இடம் பெற்றுள்ளது.

மனிதர்களில் துயரப்படுபவர்கள் இரண்டு வகை. ஒன்று, சொத்து- சுகங்களை இழந்து துன்புறுவோர். அடுத்தது, குழந்தைகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரின் செயல்களால் துயரப்படுபவர். இவர்களது துயரைப் போக்கும் விதம்... முனிவர் ஒருவர், அம்பாளின் வழிபாட்டு மகிமையைச் சொல்லும் முகமாக உள்ளது இந்தக் கதை.

சுரதன் என்ற அரசன் மிக நல்லவன்; குடிமக்களை நன்கு வாழவைத்தான். இவனது ராஜ்ஜியத்தைக் கவர நினைத்த மலைவாசிகள், திடீரென படையெடுத்து வந்து போரிட்டு வெற்றியும் பெற்றனர். தோல்வியுடன் அரண்மனை திரும்பிய மன்னன், தன் மந்திரிகளும் பகைவர்களின் கைக்கூலிகளாக இருப்பதை அறிந்து மனமுடைந்தான். அரண்மனையில் இருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்தவன், காட்டுக்குச் சென்றான்.

அங்கே, சுமேதஸ் எனும் ரிஷியின்

ஆஸ்ரமத்தைக் கண்டான். கண்ணீர் மல்க ரிஷியின் திருவடியில் விழுந் தான். அவன் யார் என்பதையும், அவனது துயரத்துக்கான காரணத் தையும் கேட்டறிந்தார் முனிவர்.

பிறகு, ''மன்னா! இங்கே நீ பகைவர் பயமின்றி வாழலாம். என் தவ வலிமையை மீறி எவரும் உன்னை நெருங்க முடியாது ஆனால்,

இங்கே நீ எங்களைப் போலவே, உதிர்ந்த செந்நெல் தானியங்களைக் கொண்டுதான் ஜீவிக்க வேண்டும்'' என்றார். மன்னனும் சம்மதித்து அங்கேயே தங்கினான். ஆனால் அவன் மனம், இழந்து போன செல்வ சுகங்களையும் ராஜ்ஜியத்தையுமே நினைத்துக் கொண்டிருந்தது.

ஒருநாள், இதே சிந்தனையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, வியாபாரி ஒருவன் வந்தான். விரக்தியுடன் காணப்பட்ட வியாபாரியிடம், ''யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?'' என்று கேட்டான் அரசன்.

''என் பெயர் சமாதி. செல்வத்துக்குக் குறைவில்லை. தர்மத்தில் நாட்டம் உள்ளவன். ஆனால் பொருளாசை மிகுந்த என் பிள்ளைகளும் உறவினர்களும் வஞ்சனை செய்து காட்டுக்குத் துரத்தி விட்டனர். அவர்கள் தீமை செய்தாலும் என் மனம் அவர்களை நினைத்தே ஏங்குகிறது'' என்று வருந்தினான் வியாபாரி.

அவனுக்கு ஆறுதல் சொன்ன மன்னன், ''வருந்தாதே; நானும் உன்னைப்போன்று பாதிக்கப் பட்டவன்தான். வா... இருவரும் சுமேதஸ் ரிஷியிடம் சென்று, நமது துயரம் தீர வழி கேட்கலாம்'' என்று வியாபாரியை ரிஷியிடம் அழைத்துச் சென்றான்.

இருவரது வேண்டுதலையும் கேட்ட ரிஷி, ''நவராத்திரியில் விரதம் இருந்து அம்பாளை பூஜியுங்கள். அவள் அருளால் உங்களின் துயரம் விலகும்!'' என்றார். அம்பாளின் மகிமைகளையும் நவராத்திரி வழிபாடுகளையும் விவரித்து, மந்திர உபதேசமும் செய்தார் (இவர் சொன்னது நவராத்திரி பூஜை முறை - 2 என்ற தலைப்பில் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது).

அதன்படியே அரசனும் வியாபாரியும், மந்திர ஜபம் செய்து, கடுந்தவத்தில் ஆழ்ந்தனர். நவராத்திரி பூஜையையும் முறைப்படி செய்தனர்.

இதன் பலனாக இருவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை. ''மன்னா, உன் பகைவர்கள் உன்னைச் சரண் அடைவர். நீ பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிவாய்!'' என்று அருள் புரிந்தாள்.

வியாபாரியின் பிரார்த்தனை வேறுவிதமாக இருந்தது. ''தாயே, எனக்கு ஞானத்தைக் கொடு! நான், பிறவிப் பெருங்கடலைத் தாண்ட விரும்புகிறேன்!'' என்றான்.

''அப்படியே ஆகும்'' என்று வரமளித்து மறைந்தாள் அம்பிகை.

மன்னனும் வியாபாரியும் சந்தோஷத்துடன் திரும்பி வந்து, வாட்டம் போக்க வழிகாட்டிய முனிவரை வணங்கி ஆசிபெற்றனர்.அம்பிகை வரமளித்த படியே, அவர்களது பிரார்த்தனைகளும் பலித்தன

நவராத்திரி கொலு

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.


1. முதலாம் படி :-

ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்.
2. இரண்டாம் படி:-

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-

மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
4. நாலாம்படி :-

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
5. ஐந்தாம்படி :-

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-

ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி :-

மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.
8. எட்டாம்படி :-

தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-

பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.


மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.


நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.

முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :-
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.

இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
4. நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வை~;ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.

ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.



மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

நவராத்திரி நோன்பு

விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது[மேற்கோள் தேவை]. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசை யன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், பூ (புஸ்பம்), இவைகளுடன்மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாஸம்முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.

குமாரி பூஜை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூஜைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.

ஆயலங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது