மனிதர்களில் துயரப்படுபவர்கள் இரண்டு வகை. ஒன்று, சொத்து- சுகங்களை இழந்து துன்புறுவோர். அடுத்தது, குழந்தைகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரின் செயல்களால் துயரப்படுபவர். இவர்களது துயரைப் போக்கும் விதம்... முனிவர் ஒருவர், அம்பாளின் வழிபாட்டு மகிமையைச் சொல்லும் முகமாக உள்ளது இந்தக் கதை.
சுரதன் என்ற அரசன் மிக நல்லவன்; குடிமக்களை நன்கு வாழவைத்தான். இவனது ராஜ்ஜியத்தைக் கவர நினைத்த மலைவாசிகள், திடீரென படையெடுத்து வந்து போரிட்டு வெற்றியும் பெற்றனர். தோல்வியுடன் அரண்மனை திரும்பிய மன்னன், தன் மந்திரிகளும் பகைவர்களின் கைக்கூலிகளாக இருப்பதை அறிந்து மனமுடைந்தான். அரண்மனையில் இருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்தவன், காட்டுக்குச் சென்றான்.
அங்கே, சுமேதஸ் எனும் ரிஷியின்
ஆஸ்ரமத்தைக் கண்டான். கண்ணீர் மல்க ரிஷியின் திருவடியில் விழுந் தான். அவன் யார் என்பதையும், அவனது துயரத்துக்கான காரணத் தையும் கேட்டறிந்தார் முனிவர்.
பிறகு, ''மன்னா! இங்கே நீ பகைவர் பயமின்றி வாழலாம். என் தவ வலிமையை மீறி எவரும் உன்னை நெருங்க முடியாது ஆனால்,
இங்கே நீ எங்களைப் போலவே, உதிர்ந்த செந்நெல் தானியங்களைக் கொண்டுதான் ஜீவிக்க வேண்டும்'' என்றார். மன்னனும் சம்மதித்து அங்கேயே தங்கினான். ஆனால் அவன் மனம், இழந்து போன செல்வ சுகங்களையும் ராஜ்ஜியத்தையுமே நினைத்துக் கொண்டிருந்தது.
ஒருநாள், இதே சிந்தனையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, வியாபாரி ஒருவன் வந்தான். விரக்தியுடன் காணப்பட்ட வியாபாரியிடம், ''யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?'' என்று கேட்டான் அரசன்.
''என் பெயர் சமாதி. செல்வத்துக்குக் குறைவில்லை. தர்மத்தில் நாட்டம் உள்ளவன். ஆனால் பொருளாசை மிகுந்த என் பிள்ளைகளும் உறவினர்களும் வஞ்சனை செய்து காட்டுக்குத் துரத்தி விட்டனர். அவர்கள் தீமை செய்தாலும் என் மனம் அவர்களை நினைத்தே ஏங்குகிறது'' என்று வருந்தினான் வியாபாரி.
அவனுக்கு ஆறுதல் சொன்ன மன்னன், ''வருந்தாதே; நானும் உன்னைப்போன்று பாதிக்கப் பட்டவன்தான். வா... இருவரும் சுமேதஸ் ரிஷியிடம் சென்று, நமது துயரம் தீர வழி கேட்கலாம்'' என்று வியாபாரியை ரிஷியிடம் அழைத்துச் சென்றான்.
இருவரது வேண்டுதலையும் கேட்ட ரிஷி, ''நவராத்திரியில் விரதம் இருந்து அம்பாளை பூஜியுங்கள். அவள் அருளால் உங்களின் துயரம் விலகும்!'' என்றார். அம்பாளின் மகிமைகளையும் நவராத்திரி வழிபாடுகளையும் விவரித்து, மந்திர உபதேசமும் செய்தார் (இவர் சொன்னது நவராத்திரி பூஜை முறை - 2 என்ற தலைப்பில் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது).
அதன்படியே அரசனும் வியாபாரியும், மந்திர ஜபம் செய்து, கடுந்தவத்தில் ஆழ்ந்தனர். நவராத்திரி பூஜையையும் முறைப்படி செய்தனர்.
இதன் பலனாக இருவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை. ''மன்னா, உன் பகைவர்கள் உன்னைச் சரண் அடைவர். நீ பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிவாய்!'' என்று அருள் புரிந்தாள்.
வியாபாரியின் பிரார்த்தனை வேறுவிதமாக இருந்தது. ''தாயே, எனக்கு ஞானத்தைக் கொடு! நான், பிறவிப் பெருங்கடலைத் தாண்ட விரும்புகிறேன்!'' என்றான்.
''அப்படியே ஆகும்'' என்று வரமளித்து மறைந்தாள் அம்பிகை.
மன்னனும் வியாபாரியும் சந்தோஷத்துடன் திரும்பி வந்து, வாட்டம் போக்க வழிகாட்டிய முனிவரை வணங்கி ஆசிபெற்றனர்.அம்பிகை வரமளித்த படியே, அவர்களது பிரார்த்தனைகளும் பலித்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக