வியாழன், 7 அக்டோபர், 2010

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்


வேதங்கள் போற்றும் வாக்தேவி!

'வாக்தேவி' என வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீசரஸ்வதி, ஞான வடிவாக திகழ்பவள். இவளின் திருமுகம்- பிரம்ம வித்தை; திருக்கரங்கள்- நான்கு வேதங்கள்; கண்கள்- எண்ணும் எழுத்தும்; திருப்பாதங்கள்- இதிகாசங்கள்; தேவியின் தனங்கள்- சங்கீத சாகித்யம்; இவளின் கரத்தில் இருக்கும் யாழ்- ஓம்காரம் எனப்படும் சர்வ ஸித்தி மந்திரத்தைக் குறிக்கும் என்கின்றன புராண நூல்கள்.

மஞ்சள் பொடி பிரசாதம்

சிவனார், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மூவரையும் திருச்சி அருகேயுள்ள உத்தமர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கே... பிரம்மனின் சந்நிதிக்கு அருகில் ஞானசரஸ்வதியாக, தனிச்சந்நிதி கொண்டிருக்கிறாள் சரஸ்வதிதேவி. இங்கு, மஞ்சள் பொடியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

வியாசர் வழிபட்ட கலைவாணி!

ந்திராவில், 'பாசாரா' எனும் ஊரில் ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு தனிக்கோயில் உண்டு. வியாசர் வழிபட்ட ஆலயம் இது. இங்கே வீணை இல்லாமல் காட்சி தரும் கலைவாணியை விநாயகர் வழிபட்டதாகவும் கதை உண்டு.

ஜப்பானில் ஸ்ரீசரஸ்வதிதேவியை 'பென்டென்' என்ற பெயரில் கல்விக் கடவுளாக வழிபடுகின்றனர்.

கலைகளின் வடிவமாய்...

நாகை மாவட்டம்- கடலங்குடியில் உள்ள சிவாலயத்தில் விசேஷ வடிவில் அருளும் கலைமகளை தரிசிக்கலாம். வளையல், கொலுசு, முத்துச் சரங்கள், கிரீடம் மற்றும் நெற்றிப்பட்டம் திகழ வித்தியாசமான வஸ்திர அமைப்புடன் அருள்பாலிக்கிறாள் இந்த தேவி.

திருமறைக்காடு தலத்தில், கலை களின் வடிவமாக நின்று இறைவனை வழிபட்டாளாம் ஸ்ரீசரஸ்வதி. இந்த ஆலயத்துக்கு வந்து அம்பிகையை தரிசித்து, சிவ பூஜை செய்தால், வேதங்களை கற்றுணர்ந்த பலனைப் பெறலாம்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்!

சரஸ்வதிக்கு தனிக்கோயில்!

குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ளது பத்மநாபபுரம். இங்கே... தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீசரஸ்வதி. திருவனந்தபுரம் ஆராட்டு விழாவின் போது, இங்கு உள்ள சரஸ்வதிதேவியே எழுந்தருள்கிறாளாம்.

அஷ்ட சரஸ்வதிகள்

வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர் அஷ்ட சரஸ்வதிகளாம்!

நடனமாடும் சரஸ்வதி

ர்நாடக மாநிலம், பேலூர் ஆலயத்தில், சிலம்பொலியே பிரணவ நாதமாக, வீணையின் ஒலியே வேத கீதமாக இசைக்க... ஆனந்த நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறாள் சரஸ்வதி தேவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக