வியாழன், 7 அக்டோபர், 2010

அலைமகளே வருக... ஐஸ்வரியம் தருக!


ஆந்தை வாகனத்தில் அலைமகள்!

திருமகளின் வாகனம் அன்னம் என்கின்றன ஞான நூல்கள். ஆனால், வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி நாட்களில், தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்கின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால், சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்புகின்றனர்.

மதிய வேளையில் மகாலட்சுமி!

கேரளா- சோட்டாணிக்கரையில், ஸ்ரீலட்சுமி நாராயண தத்துவத்துடன் எழுந்தருளியிருக்கிறாள் ஆதிபராசக்தி. இங்கே தரிசனம் தரும் சிவப்பு வெட்டுக்கல்- பகவதி அம்மனாகவும், வலப்புறம் உள்ள சிறிய கருங்கல்- மகா விஷ்ணுவாகவும் பூஜிக்கப்படுகின்றன. இங்கே காலையில்- வெண்ணிற ஆடை யுடன் ஸ்ரீசரஸ்வதிதேவியாகவும், மதியம்- செந்நிற ஆடையுடன் ஸ்ரீலட்சுமி யாகவும், மாலை வேளையில்- நீல நிற ஆடையுடன் ஸ்ரீதுர்கையாகவும் காட்சி தருகிறாள் அம்மன்.

விளக்கில் தீபலட்சுமி... விலங்குகளில் சோபலட்சுமி!

விளக்கில் வாசம் செய்பவள் ஸ்ரீமகா லட்சுமி. எனவே, திருவிளக்கை தீபலட்சுமி என்பர். ஸ்ரீதுர்கையின் வடிவங்களிலும் ஸ்ரீதீபதுர்கை உண்டு. தீபமேற்றப்பட்ட விளக்கை, ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடாது என்பது ஐதீகம்!

தீபத்தில் தீபலட்சுமியாகத் திகழ்பவள் வைகுண்டத்தில்- ஸ்ரீமகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில்- ஸ்ரீசொர்க்கலட்சுமியாகவும், ராஜ்ஜியத்தில்- ஸ்ரீராஜ்யலட்சுமியாகவும், இல்லங்களில்- கிரக லட்சுமியாகவும், விலங்குகளிடம்- ஸ்ரீசோப லட்சுமியாகவும், புண்ணியசீலர்களிடம்- ஸ்ரீப்ரீதி லட்சுமியாகவும், சத்திரியர்களிடம்- ஸ்ரீகீர்த்தி லட்சுமியாகவும், வேதாந்திகளிடம்- ஸ்ரீதயா லட்சுமியாகவும் அருள்பாலிப்பதாக புராண நூல்கள் கூறுகின்றன.

திருமகளின் அருள் வேண்டுமா?

காலட்சுமி அஷ்டகம், ஸ்ரீசூக்தம், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ரஸத நாம ஸ்தோத் திரம், ஸ்ரீஸ்துதி, தனவிருத்தி, தனவிருத்திமாலை ஆகியவற்றை பாராயணம் செய்து நவராத்திரியில் ஸ்ரீமகாலட்சுமியை வழிபட்டால், சகல சௌபாக்கியமும் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

ஒரு மணி நேரம் தாயாரைப் பிரியும் பெருமாள்

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீஉப்பிலியப்பன் ஆலயத்தில், தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை பெருமாள். எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவாராம்! ஆனால் நவராத்திரி- அம்பு போடும் வைபவத்தின்போது ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக